
அறிவோமா அருள்மிகு நகரத்தார்களை
அத்தியாயம் – 7:
ஈசனை போற்றி வழிபடுவதற்குப் பல அறிய விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான விரதங்கள்:
1. பாசுபத விரதம்
2. சோமவார விரதம்
3. திருவாதிரை விரதம்
4. உமாமஹேஸ்வர விரதம்
5. சிவராத்திரி விரதம்
6. பிரதோஷ விரதம்
7. அஷ்டமி விரதம்
8. கேதார கௌரி விரதம்
இவற்றுள் பாசுபத விரதம் மிகவும் உயர்வாக சொல்லப்படுகிறது. இந்த விரதத்தை பன்னிரெண்டு மாதங்களும் கொண்டாடப்பட வேண்டும். எல்லா மாதங்களிலும் சிவலிங்க பூசை செய்ய வேண்டும். சிவனடியார்களுக்கு உணவு அளித்து சிவலிங்கங்களை தானமாக கொடுக்க வேண்டும். நாம் பூசை செய்த சிவலிங்கங்களை சிவாலயங்களில் சேர்த்து விட வேண்டும்.
இந்த விரதத்தின் போது, சிவனை வியபோகன தோத்திரத்தால் பூசை செய்ய வேண்டும். இந்த தோத்திரம், 110 ஸ்லோகங்களை கொண்டது.
சோமவார விரதம் – கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை தோறும் சோமவார விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில், வீட்டிலேயே சிவபூசை செய்ய வேண்டும். பிறகு ஒரு அந்தனரையும் அவர் மனைவியையும் அழைத்து, அவர்களை சிவன்-பார்வதியாக நினைத்து தானம் செய்ய வேண்டும். பகல் முழுதும் சாப்பிடாமல் விரதமிருந்து, இரவில் மட்டும் உணவருந்த வேண்டும். வீட்டில் பூசை செய்ய முடியாதவர்கள், சிவன் கோவிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து, அன்னதானம் செய்ய வேண்டும். மற்ற விரதங்களைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். - புத்தகத்தில் படித்தது.
சிவஸ்தலங்களுக்கு யாத்திரை சென்றும், கருணை காட்டாத இறைவனை நினைத்து உறங்கிய திருவெண்காடருக்கு, ஒரு கனவு வந்தது. அதில், அவர் வீட்டு திண்ணையில், ஒரு வயோதிக பிரமாணரும், அவர் மனைவியும் உட்கார்ந்து இருக்கிறார்கள். திருவெண்காடர் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், எங்கள் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கையில் குழந்தை இல்லை. குழந்தை எங்கே என்று திருவெண்காடர் கேட்டதற்கு, திருவிடைமருதூரில் இருக்கிறது என்று கூறி அவர்கள் மறைந்து விட்டார்கள். திருவெண்காடருக்கும் கனவு கலைந்தது.
இந்த கனவில் வந்த மாதிரி, திருவிடைமருதூர் வரை போயி பார்ப்போமே என்று எண்ணி, மறு நாள் தன் மனைவியை அழைத்துக் கொண்டு திருவிடைமருதூருக்கு சென்றார். அங்கே, அவர் கனவில் கண்ட மாதிரி, ஒரு வயதான பிரமாணரும், அவர் மனைவியும் இருந்தார்கள், பக்கத்தில் ஒரு தொட்டிலில் அழகே உருவான ஒரு குழந்தை படுத்திருந்தது. அவர்களிடம் திருவெண்காடர் சென்றபோது, அந்த பிராமணர், ஐயா, நீங்கள் தான் திருவெண்காடாரா!! எங்களுக்கு நீண்ட நாள் கழித்து, இந்த குழந்தை பிறந்தது. ஆனால் எங்கள் வறுமையின் காரணமாக, இந்த குழந்தையை எப்படி வளர்க்க போகிறோம் என்று நினைத்து கவலைப் பட்டுக்கொண்டிருந்த பொழுது, இந்த குழந்தையை திருவெண்காடாரிடம் கொடுத்தால், எடைக்கு எடை பொன் கிடைக்கும் என்று ஒருவர் கனவில் கூறினார். அதன்படி நாங்களும் உங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தோம் என்று கூறினார். திருவெண்காடருக்கு இப்போது எல்லாம் புரிந்தது. இறைவன் நடத்திய அதிசயத்தை நினைத்து நினைத்து மனம் பூரித்துப் போனார். உடனே, அவர்களையும் அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டுக்கு வந்து, அக்குழந்தையை எடைக்கு எடை பொன் கொடுத்து தத்தெடுத்துக் கொண்டார். பிறகு, அக்குழந்தைக்கு மருதவாணன் என்று பெயர் சூட்டி, தாங்கள் பெற்றெடுத்த குழந்தை போல் வளர்த்து வந்தார்கள். அந்த குழந்தையும் நன்றாக வளர்ந்து வந்தது. தக்க வயது வந்தவுடன், மருதவாணனை திருவெண்காடர், தன்னுடைய கடைகளுக்கு அழைத்துச்சென்று வணிகத் தொழிலை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
பிறகு, கடல் கடந்து வாணிபம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மருதவாணனை, ஒரு தனிக் கப்பலில் கடாரத்துக்கு(1) அனுப்பினார்.
மூன்று மாதங்கள் கழித்து, அந்த கப்பல் திரும்பி வந்தது. மருதாவாணன் கப்பலில் இருந்து வீட்டுக்கு போய் விட்டான். திருவெண்காடரோ, தன் மகன் எவ்வாறு வாணிபம் செய்திருப்பான் என்ற ஆவலில், அவரே முன்னின்று வேலையாட்களிடம் அந்த கப்பலுக்குள் இருந்த எல்லாவற்றையும் இறக்கச் சொன்னார். தங்கமும்,வைரமும்,நவமணிகளுமாக பெட்டி, பெட்டியாக இறங்க வேண்டிய பொருள்கள், மூட்டை மூட்டையாக இறங்கின. திருவெண்காடருக்கு ஒரே குழப்பம் ஆகி விட்டது. ஏனென்றால், தங்க,வைரங்களை எல்லாம் மூட்டையாக கட்ட கூடாது, ஏன் இவன் எல்லாத்தையும் மூட்டையாயக காட்டிக் கொண்டு வந்திருக்கான் என்று எண்ணினார். அப்படி என்னதான் அந்த மூட்டைக்குள்ள இருக்குதுன்னு, ஆர்வம் மிகுதியால் ஒரு மூட்டையை பிரித்துப் பார்த்தார். உள்ளே எல்லாம் எரு முட்டைகளும், தவிட்டு உமிகள் தான் இருந்தன. தங்கமும், நவமணிகளையும் நம் மகன் வாணிபம் செய்து கொண்டு வருவான் என்று எதிர்பார்த்த திருவெண்காடருக்கு வெறும் எரு முட்டைகளையும், தவிட்டு உமிகளையும் பார்த்தவுடன், மிகுந்த கோபம் உண்டாயிற்று. ஆத்திரமும், கோபமும் ஒன்று சேர, தன் வீட்டுக்கு சென்ற திருவெண்காடர், தன் மனைவியிடமும், அன்னையிடமும் நடந்ததை கூறி, பக்கத்தில் இல்லாத மகனை ஆத்திரம் தீர திட்டி தீர்த்தார். பிறகு கோபம் தணியாமல், கப்பிலில் இருந்து கொண்டு வந்த மூட்டையை, காலால் எட்டி உதைத்தார். அந்த மூட்டை சுவரில் மோதி உடைந்து, உள்ளே இருந்ததெல்லாம் தரையில் சிதறியது. அந்த சிதறிய பொருட்களை எல்லாம் பார்த்த திருவெண்காடருக்கு ஆச்சிரியமும், ஆனந்தமும் ஒரு சேர தாக்கியது. எரு முட்டைகள் எல்லாம் நவ மணிகளாகவும், தவிட்டு உமிகள் எல்லாம் தங்க உமிகளாகவும் தரையில் சிதறி இருந்தது. என்னதான் ஆனந்தமடைந்தாலும், மகனை ரொம்பவும் திட்டி விட்டோமே என்று அவர் மனது மிகவும் வேதனைப்பட்டது. தன் மகனை உச்சி முகர்ந்து சந்தோஷப் பட வேண்டும் என்று அவனை வீடெங்கும் தேடினார்.
அப்போது திருவெண்காடருடைய தாயார், அவரிடம், இந்த பெட்டியை தன் தந்தையிடம் கொடுத்து விடுங்கள் என்றும், இனி என்னை தேட வேண்டாம் என்று சொல்லி விட்டு போய்விட்டான் என்று கூறினார்கள். அந்த சிறு பெட்டியை தன் தாயிடமிருந்து வாங்கி அதனை திறந்து பார்த்த திருவெண்காடருக்கு ஒரு நொடி மூச்சே நின்று விட்டது. அவருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. அப்படியே அந்த பெட்டிக்குள் இருந்ததையே பார்த்துக் கொண்டு சிலை போல சிறிது நேரம் நின்று விட்டார். அப்படி என்ன தான் அந்த சிறிய பெட்டிக்குள் இருந்தது ...... அதனை தெரிந்துக் கொள்வதற்கு அடுத்த அத்தியாயம் வரை பொறுத்திருங்கள்.
- தொடரும்
குறிப்புகள்:
1. காடாரம் – தற்போது உள்ள மலேஷியா நாட்டில் ஒரு சிறிய நாடாகும். அந்தக் காலங்களில் தற்போது உள்ள ஒரு நாடே, சிறு சிறு நாடாக பிரிந்திருக்கும்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
சென்ற அத்தியாயத்தின் விடைகள்:
1. சோழ மன்னர்கள் முடி சூட்டிக்கொள்ளும்போது யாரிடம் இருந்து மகுடத்தை பெறுவார்கள் ?
- வணிகர்களிலேயே மிகப் பெரிய தனவந்தராக இருப்பவரிடமிருந்து மகுடத்தை பெற்றுக்சொல்வார்கள்.
2. திருவெண்காடரின் தமக்கையின் பெயர் என்ன?
- தில்லையம்மை.
3. திருவெண்காடரின் மற்றொரு பெயர் என்ன?
- சுவேதாரண்யன்.
4. திருவெண்காடர் எந்த வயதில் கடைகளை பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்?
– 16 வயதில் கடைகளை பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்.
5. பட்டினத்தார் நகரத்தார் என்பதற்கு மேலும் ஒரு சான்று, அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த சான்று. அது என்ன?
- இளையத்தங்குடி கோவிலில் ஒரு பிரிவின் பெயர், பட்டினத்தார் பெயரிலே இருக்கும் பட்டினசாமியார் ஆகும்.
இந்த அத்தியாயத்தின் கேள்விகள்:
1. திருவெண்காடர் தன் சுவீகார குழந்தையை முதன் முதலில் எங்கு பார்த்தார்?
2. திருவெண்காடர் அந்த குழந்தையை எவ்வாறு தத்தெடுத்தார்?
3. திருவெண்காடர் முதலில் பிரித்துப் பார்த்த முட்டையில் என்ன இருந்தது?
“பிறையாயிரம்” கண்ட பெருவிழா” என்பது, ஒருவர் தம் பிறந்த மாதத்தலிருந்து அமாவாசையை தொடர்ந்து வரும் 1008 பிறைகளை காண்பது தான். இதனை “ஸஹஸ்ர சந்திர தரிசனம்” என்றும் கூறுவர். ஆண்கள் தங்கள் வயது, 82 வருடம் எட்டு மாதம் முடியும் போது, தங்கள் துணைவியோடு சதாபிஷேகம் செய்துக் கொள்ளும்போது இதனை கொண்டாடுவார்கள்.
கேள்வி: “பணத்திருப்பு” என்றால் என்ன?
இதற்கான பதிலோடு மீண்டும் உங்களை அடுத்த அத்தியாயதில் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைப்பெறுவது,
என்றும் உங்கள்
சொக்கன்
